×

நத்தம் அருகே பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கட்டிய 12ம் நூற்றாண்டை சேர்ந்த சுங்கச்சாவடி கண்டுபிடிப்பு

திண்டுக்கல் : நத்தம் அருகே பிற்கால பாண்டியர்கள் காலத்தை சேர்ந்த 12ம் நூற்றாண்டை சேர்ந்த சுங்கச்சாவடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், தளிர் சந்திரசேகர், வரலாற்று மாணவர்கள் ரத்தினமுரளிதர், ஆனந்த், நடராஜன், உமா மகேஸ்வரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நத்தம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது:

திண்டுக்கல் - நத்தம் சாலை செட்டிநாடு பகுதிகளை இணைக்கும் பெருவழி பாதையாக இருந்துள்ளது. கிழக்கு கடற்கரை, தொண்டி, கொற்கை துறைமுகங்களில் இருந்து கடல்படு பொருட்களும், செட்டிநாட்டு பகுதியில் விளையும் விளைபொருட்களும் திண்டுக்கல் வழியாக தற்போதைய பழநி, கரூர், கோவை உள்ளிட்ட கொங்குநாடுக்கு செல்லும் பாதையாக இருந்துள்ளது. இப்பாதையில் சிறுமலையும், கரந்தமலையும் மிக அருகே சந்திக்கும் கணவாயின் (தற்போது நத்தம் அருகே உள்ள கணவாய்பட்டி என்று அழைக்கப்படும்) கிழக்கு பகுதியில் பிற்கால பாண்டியர் கட்டிய சுங்கச்சாவடியும், அதை ஒட்டி பெரிய மண்டபமும் உள்ளது.

மேலும் பாண்டியர் காலத்தில் இவ்வழி செல்லும் விளைபொருட்களுக்கு உள்ளூர் முத்திரை தீர்வை வரி விதிப்பும், பொருட்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சிறுபடை பிரிவும் இவ்விடத்தில் இருந்துள்ளது. இவ்விரு மண்டபத்தில் கிழக்கு பார்த்தபடி இருப்பது சுங்கச்சாவடியும், தெற்கு பார்த்தபடி இருப்பது மண்டபமாகவும் இருந்துள்ளது. இதன் எதிர் சாலையை அடுத்து சிறுமலை நீரோடையில் இரு கல் தொட்டி உள்ளது.இக்கல் தொட்டி அக்கால பொதி விலங்குகள், குதிரைகள் தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.

மண்டபத்து சுவரில் பிற்கால பாண்டியரின் சின்னமான இணை மீன்களும், மீன்களுக்கு நடுவே செண்டும் உள்ளது. மண்டப தூண்களில் கண்ட பகுதிகளில் சிவலிங்க சின்னமும், ஜெகதி பகுதிகளில் கும்பம், கொடி முல்லை சுவர் பகுதிகளில் மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இவை பிற்கால பாண்டியர்களின் கட்டிட கலைக்கு சான்றாக உள்ளது‌.

தற்போது இச்சுங்கச்சாவடி, மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளன. இச்சுங்கச்சாவடியில் வரும் வரியின் ஒரு பகுதியை நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலுக்கு வழங்கப்பட்டதனை குறிக்கும் வகையில் இந்த இரு மண்டபத்திற்கு அருகே சிவன் கோயில் சொத்துக்களாக உறுதிப்படுத்தும் சூலக்கல் குறியீடு இரண்டு உள்ளது. எனவே இந்த 12ம் நூற்றாண்டை சேர்ந்த சுங்கச்சாவடியையும், பெரிய மண்டபத்தையும் தொல்லியல் துறை முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.



Tags : Pandyans ,Nattam , Dindigul: A 12th century toll booth belonging to the later Pandyan period has been discovered near Natham.
× RELATED நத்தம் அருகே செந்துறையில் புனித...